நிதி ஒதுக்குவதில் பாகுபாடு… அதிமுக – திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் : சேலம் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 3:40 pm
Quick Share

சேலம் ; சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.

அப்போது, அதிமுக கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைத்தனர். இதனால், திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேசியதாவது :- கவுன்சிலர்கள் கூறிய கருத்துக்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடந்த ஆட்சியின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய பல்லாயிரம் கோடி கிடைக்கவில்லை. தற்போது நிதி நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளுக்கும் சமமாக நிதியை பிரித்துக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அந்தந்த வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாமன்ற உறுப்பினர்கள் பூர்த்தி செய்து கொள்ள இயலும், என்றார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கடமையை ஆற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து மான்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Views: - 424

0

0