‘எச்சை தட்டை கழுவச் சொல்றாங்க;… எஜமானர்களாக நடந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் : பள்ளி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம்!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 3:45 pm
Quick Share

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவறையை சுத்தம் செய்யக்கூறிய ஆசிரியர்களை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டு, டீ கிளாஸ் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்யக்கூறி மாணவர்களை கட்டாயப்படுத்தியதாகவும், அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாங்கள் செய்யச் சொன்ன வேலையை செய்ய மறுத்த 8-ம் வகுப்பு மாணவியை முட்டி போடச்சொல்லி தண்டனை அளித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர்களின் இந்தப் போக்கை கண்டித்து இன்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

Views: - 494

0

0