அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ‘சீல்’ : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

18 September 2020, 5:21 pm
Cbe Commissioner - updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகள், மீன், கோழி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அரசின் நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் நோய் பரவலைத் தடுப்பதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கொரோனா தொற்று பரவுதலைத் தடுப்பதற்காக அவ்வப்போது பொதுமக்களுக்கு காணொலி காட்சி மூலமாக பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகராட்சியில் நோய் பரவலைத் தடுக்கும் வண்ணம் இறைச்சிக் கடைகள், மீன், கோழி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், (நகை,ஜவுளி), காய்கறி விற்பனைக் கடைகள், மார்க்கெட்டுகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

மீன் கடை, இறைச்சிக் கடைகளில் 2 மீட்டர் இடைவெளியுடன் கூடிய அடையாள வட்டம் இடப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத கடைகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இவ்வாறு பின்பற்றாத கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும். மேலும், உரிமையாளர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காத
வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்பதை கடை உரிமையாளர் எடுத்துரைக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட அனைவரும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்கிட வேண்டும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Views: - 5

0

0