11 அதிமுக எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் இன்று விசாரணை!
27 August 2020, 9:18 amசென்னை : 2017ஆம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது இன்று சபாநாயகர் விசாரணை நடத்துகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்பு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணியாக செயல்பட்ட போது சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் 11எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் இரு அணியினரும் ஒன்றாக இணைந்தனர். இந்த நிலையில் 11 பேரையும தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பிலும், டிடிவி தினகரன் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் திமுக சார்பாக இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகரே முடிவு எடுப்பார் என தெரிவித்தது.
இதையடுத்து 11 பேரிடம் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் விசாரணை நடத்த தொடங்கியுள்ளார். இன்று காணொலி காட்சி மூலம் இந்த விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.