மோடியை எதிர்க்கும் தகுதியுடைய ஒரே நபர் ராகுல் மட்டுமே… பாஜகவை எளிதாக வீழ்த்த தமிழக காங்கிரஸ் பிரமுகர் கொடுத்த ஐடியா…!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 2:36 pm
rahul - modi -updatenews360
Quick Share

திருச்சி : எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் கலைப் பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கலைப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலைப் பிரிவில் மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் கலைப் பிரிவு சார்பில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநகர் மாவட்ட தலைவர் ராகவேந்திரா, தெற்கு மாவட்ட தலைவர் அர்ஜுனன், வடக்கு மாவட்ட தலைவர் ரகுநாத், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை டிஜிட்டல் முறையில் நடந்து வருகிறது. இதில் கலைப் பிரிவு சார்பில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திருச்சி பாலக்கரையில் நடிகர் திலகம் சிவாஜியின் சிலை திறக்கப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து சிவாஜி சிலையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். வருகின்ற ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி மற்றும் பாஜகவை எதிர்க்கிற தகுதி ராகுல்காந்திக்கு மட்டும்தான் உள்ளது. மேலும் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் அப்போதுதான் 2024 தேர்தலில் பாஜகவின் வீழ்த்த முடியும், என கூறினார்.

Views: - 549

0

0