அதிமுக கூட்டணியில் தொடரவே பாஜக விரும்புகிறது: கே.டி.ராகவன் பேட்டி

26 September 2020, 11:14 pm
Quick Share

கிருஷ்ணகிரி: அதிமுக கூட்டணியில் தொடரவே பாஜக விரும்புவதாக கிருஷ்ணகிரியில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராகவன் கூறினார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ராகவன் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பாஜக அணிகளின் மாநாடு பர்கூரில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டிசம்பர் மாதத்தில் மாவட்ட மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது. தொடரவே பாஜக விரும்புகிறது. இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். தேசிய நிர்வாகிகள் குறித்த முதல் பட்டியல்தான் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்த பட்டியல்கள் வெளிவர உள்ளன. அதில் பலர் முக்கிய பொறுப்புகளில் இடம்பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரசிம்மன், மாவட்டத் தலைவர் தர்மலிங்கம், மாநில செயற்குழுஉறுப்பினர் ஹரிகோடீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Views: - 0 View

0

0