திருச்செந்தூரில் 100மீ தூரம் உள்வாங்கிய கடல்…2வது நாளாக வெளியே தெரியும் பாறைகள்: பயமின்றி செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்..!!

Author: Rajesh
4 April 2022, 5:30 pm
Quick Share

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் நீர் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள சிறிய பாறைகள், மணல் திட்டுகள் தெரிந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியதால், மண் திட்டுகள் மற்றும் பாறைகள் வெளியே தென்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது வழக்கம். இந்த நாட்களில் கடல் நீர் உள்வாங்குவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி இரவு முதல் 1ம் தேதி மதியம் வரை அமாவாசை இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு மற்றும் அய்யா வைகுண்டர் கோவில் பகுதிகளில் சுமார் 100 அடி தூரத்தில் கடல்நீர் உள்வாங்கியது.

அமாவாசை தினத்தை முன்னிட்டு 2 நாட்களுக்குப் பிறகு, கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமான நிகழ்வாக இருந்தது. கடந்த அமாவாசை தினத்தன்று, கடல் உள்வாங்கிய நிலையில் தொடர்ந்து இன்று 4வது நாளாக கடல்நீர் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் வெளியில் தெரியும் பாறைகள் மீது நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு, கடல் உள்வாங்கும் நிகழ்வு தெரியும் என்பதாலும், கோயில் வளாகத்தை ஒட்டிய கடல் பகுதியில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை என்பதாலும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

Views: - 1074

0

0