பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று முதல் 2 நாட்கள் ஸ்டிரைக் : ரூ.100 கோடி உற்பத்தி பாதிக்கும் அபாயம்..!!

Author: Babu Lakshmanan
16 May 2022, 10:50 am
Quick Share

பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு இன்றும், நாளையும் கரூரில் உள்நாடு மற்றும் வெளி நாடு ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்  சங்கம், கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் ஓனர் அசோசியேசன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம் ஆகிய  அமைப்புகளின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கரூர் மாநகரில் பரபரப்பாக காணப்படும் ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், செங்குந்தபுரம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அதனை சார்ந்த நிறுவனங்கள் பூட்டி இருகின்றன. 

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150  நூல் வினியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த  நிறுவனங்கள் மூலமாக சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.  

இந்த உற்பத்தி நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமான அளவில் ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்படும் என ஜவுளி துணி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

Views: - 722

1

0