3 குட்டிகளுடன் குடும்பமாக சுற்றித்திரியும் புலி: அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!!

3 March 2021, 11:40 am
cbe tiger - updatenews360
Quick Share

கோவை: காரமடை அருகே பில்லூர் வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி நடமாடி வரும் வீடியோ வெளியாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. 3வது மாற்றுப்பாதையாக காரமடையில் இருந்து வெள்ளியாடு சென்று கெத்தை முள்ளி சோதனை சாவடி வழியாக உதகைக்கு சாலை செல்கிறது.

இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இச்சாலையில் குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான சாலை அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளன. இந்நிலையில் அடிக்கடி வனத்தில் இருந்து கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுயானைகள், மான் ஆகியவை இவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த 1 மாதத்திற்கு மேலாக குண்டூர், கெத்தை, முள்ளி சோதனை சாவடி, பில்லூர் அணை, பரளிக்காடு உள்ளிட்ட பகுதியில் 3 குட்டிகளுடன் புலி நடமாடி வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது முள்ளி சோதனை சாவடி அருகில் 3 குட்டிகளுடன் புலி சாலையை கடந்துள்ளது. அதனை அவ்வழியாக காரில் சென்ற வாகன ஓட்டுநர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர, கனரக வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் முள்ளி சோதனை சாவடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழகம் மற்றும் கேரளா மாநில வனத்துறையினர், போலீஸார், நக்சல் தடுப்பு போலீஸார் அச்சத்தில் உள்ளனர். மேலும் இச்சாலையில் அதிகளவில் போக்குவரத்து இல்லாததால் புலி சாலையின் ஓரத்தில் வந்து செல்வது இயல்பாக இருக்கும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய கேரளா மட்டுமல்லாமல் கோவையில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இப்பாதையில் இருசக்கர வாகன ஓட்டுநர்களை பயணம் செய்ய வனத்துறையினர் தடை விதிக்க வேண்டுமென உள்ளூர்வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Views: - 1

0

0