வடமாநில வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவா செல்ல திட்டமிட்ட கொள்ளையர்கள்.. கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்..!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 9:25 pm
Quick Share

திருப்பூரில் கத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் 16 லட்சம் கொள்ளையடித்து விட்டு கோவா செல்ல திட்டம் போட்ட கொள்ளையர்களின் கனவு காலியானது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. வடமாநிலத்தினை சேர்ந்த பலர் கடைகளை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹத்ம்த் சிங் என்பவர் வீட்டு உபயோக பொருட்களுக்கான கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கடைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த, நான்கு பேர் கொண்ட கும்பல் ஹத்மத் சிங்கிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கேட்டனர். அவர் பணம் தர மறுத்துள்ளார்.

தொடர்ந்து அங்கு லாக்கரில் இருந்த பணம், அவரது மொபைல் போண்களை கொள்ளையடித்து கொண்டு, வெளியில் காரில் தயாராக இருந்த, மூன்று பேருடன் காரில் ஏறி கும்பல் தப்பி சென்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை குறித்து தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். அதில், ஏழு பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக, ‘சிசிடிவி’ பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.

கொள்ளை கும்பல் பின்னால், டூவீலரில் வந்த வாலிபர்கள் பின்தொடர்ந்து வருவதாக நினைத்து காரை நிறுத்தி வாலிபர்களிடம் தகராறு செய்தனர். அக்கம்பக்கத்தினர் பார்த்து சத்தம் போடவே , வித்யாலயம் அருகே காரை நிறுத்திய கொள்ளையர்கள் தனித்தனியாக இருவரும், பாரதி நகரில், ஐந்து பேரும் என மக்களோடு மக்களாக கலந்து தப்பி சென்றனர். வித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். காரின் இருபுறமும் உள்ள நம்பர் பிளேட் மீது போலி நம்பர் பிளேட்டுகளை ஒட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

காருக்குள், பெரிய வாள், மொபைல் போன், மதுபாட்டில் மற்றும் போலீஸ் என்ற ஸ்டிக்கரும் இருந்தது. இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர். சென்னை பதிவு எண் கொண்ட கார் என்பதும் , உரிமையாளர் திருப்பூரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில், கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் தெற்கு இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பத்ரா மற்றும் எஸ்.ஐ., விஜயகுமார் என, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

முதல்கட்டமாக, சிக்கிய காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்தனர். திருப்பூர் கொடிகம்பத்தை சேர்ந்த ஜெயபாண்டி, என்பவர் மூலமாக காரை வாடகைக்கு எடுத்தது தெரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரிடம் தனிப்படையினர் விசாரித்தனர். ஜெயபாண்டியின் மனைவி நிரோஷாவின் தம்பி சக்திவேல், நண்பரின் பிரசவத்துக்காக செல்ல வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய ஜெயபாண்டி 3 ஆயிரம் ரூபாய்க்கு கண்ணன் என்பவரிடம் இருந்து வாடகைக்கு கார் எடுத்து கொடுத்துள்ளது தெரிந்தது. கொள்ளை கும்பலை தேடி கோவை, சிவகங்கைக்கு தனிப்படையினர் விரைந்தனர். இதில் தொடர்புடைய, இருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரனை செய்துள்ளனர். இதன் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலரின் கணவர் சக்திவேல் அவரது நண்பர்களான அழகர், வாசு, ஜெயபாண்டி, தவம், சிவமணி ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.

காமட்சியம்மன் கோவில் வீதியில் ஹத்மத் சிங் வீட்டு உபயோக பொருட்கள் கடையுடன் சேர்த்து, கூடுதலாக பணம் மாற்றி தரும் வேலையும் செய்து வந்துள்ளதாகவும், திருப்பூரில் உள்ள வடமாநிலத்தவரிடம் கணக்கில் வராத பணத்தை பெற்று கொண்டு, அவர்கள் சொல்லும் இடங்களுக்கு அங்கு பணத்தை மாற்றி கொடுத்து, அதற்கு கமிஷன் பெற்று வந்துள்ளார். இதை கடந்த, இரு ஆண்டுகளாக செய்து வருகிறார். லட்சம் ரூபாய்க்கு, 100 முதல், 200 ரூபாய் வரை பெற்று வந்தார். சென்னை, பெங்களூர், டெல்லி, குஜராத் போன்ற பல மாநிலங்களுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

இதை அறிந்துகொண்ட சக்திவேல் தலைமையிலான கொள்ளை கும்பல் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாகவும் , இது குறித்து கத்மத் சிங் புகார் அளிக்க மாட்டார் என்ற அடிப்படையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருந்ததாகவும் , கொள்ளையடித்த பணத்தில் கோவா சென்று அங்கு பணத்தை பங்கு போட்டு பிரித்துக் கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் நான்கு பேர் குரூப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவு குற்றவாளிகள் ஐந்து பேரை தேடி வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேரை கோவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதற்கும் காவல்துறையினர் தெரிவித்தனர். சக்திவேலுவின் மனைவி பிரியா, கோவை மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை போலீசாராக உள்ளார். கடந்த சில மாதங்களாக மகப்பேரின்மை விடுப்பில் உள்ளார் . கொள்ளை கும்பலில் தொடர்புடைய, சக்திவேல் மீது கோவை, சிவகங்கையில் வழக்குகள் உள்ளது. மற்ற நபர்களும் கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடையது தெரிந்துள்ளது.

Views: - 244

0

0