பஞ்சாயத்து தலைவர் மீது ரூ.45 லட்சம் முறைகேடு புகார்… துணைத் தலைவர் உள்பட வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா…!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 12:00 pm
Quick Share

திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் 45 லட்சம் முறைகேடு செய்ததாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சரண்யா முரளி. இவர், பஞ்சாயத்தில் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு 45 லட்சம் பணத்தை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 15 மாதங்களாக இந்த ஊராட்சியை சேர்ந்த துணைத் தலைவர் முனுசாமி, வார்டு உறுப்பினர்கள்;-விஜய பாரதி, ராதா, காஞ்சனா, அஜந்தா ஆகியோர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

பஞ்சாயத்தில் முறைகேடு செய்த 45 லட்சம் பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும், முறைகேடு செய்த பஞ்சாயத்து தலைவர் சரண்யா முரளியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் சரண்யா முரளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்த பஞ்சாயத்து துணை தலைவர் மற்றும் 4 வார்டு உறுப்பினர்கள், தங்களின் ராஜினாமா கடிதத்தையும் வருவாய் கோட்டாட்சியர் தீபா அவர்களிடம் வழங்கியுள்ளனர். இது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 167

0

0