‘கானா’ பாடி மிரட்டல் விடுத்த இளைஞர்: ‘மன்னிப்பு கானா’ பாட வைத்த போலீசார்…கோவையில் ருசிகரம்..!!

Author: Aarthi Sivakumar
7 December 2021, 10:45 am
Quick Share

கோவை: கோவையில் கானா பாடல் பாடி மிரட்டல் விடுத்த இளைஞரை பிடித்த போலீசார் “இது தவறு….” என மறு கானா பாட்டு பாட வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரில் சில இளைஞர்கள் “ஸ்வீட் ராஸ்கல்” என்ற குழுவை ஆரம்பித்துள்ளனர். பின்னர், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், “எவரெஸ்ட் பாய்ஸ்” எனும் புது குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதனையடுத்து இரு குழு இளைஞர்களும் சூலூர் பகுதியில் வழக்கமாக நடைபெறும் பொங்கல் மற்றும் இதர விழாக்களின் போது, அவ்வப்போது மோதிக் கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இதனால், பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன.

இது சம்பந்தமாக, அக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் மீது சூலூர் போலீசார் ஏற்கனவே இரு சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்து சுமார் 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று வந்த ஒருவரை மற்றொரு குழுவினர் ஆயுதங்களுடன் துரத்தி சென்று கடுமையாகத் தாக்கினர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்த நபரும் சூலூர் மதியழகன் நகரை சேர்ந்த ஆபீஸ் (18) என்ற இளைஞர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படும் இந்த இளைஞர், ஏற்கனவே குழு மோதலில் ஈடுபட்டு ஒரு வழக்கில் தேடப்பட்டு வந்தவர். அவ்வப்போது கானா பாடல்களை பாடி அப்பகுதி இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு வந்துள்ளார். இதனால், இளைஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இது சம்பந்தமாக, தற்போது கையில் கத்தியை வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக கானா பாட்டு ஒன்றை அவர் பாடியுள்ளார். அதில், “உன்னை மர்டர் பண்ணுகிறேன் நீ தாண்ட மாட்டாய் சூலூர் பார்டரை…” என வன்முறையை தூண்டும் வகையில் பாடிய பாடல் சூலூர் போலீசாருக்கு கிடைத்தது.

இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் இன்று அதிகாலை சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் தலைமை காவலர் சந்துரு, வரதராஜன் உள்ளிட்ட குழுவினர், அந்த இளைஞரை வளைத்து மடக்கி பிடித்தனர்.

மேலும், பாடிய மிரட்டல் கானா பாடலுக்கு மறுப்பு பாடல் பாடவைத்த போலீசார் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 162

0

0