போலீசாரை தென்னை மட்டை, கட்டையால் தாக்கிய இளைஞர்கள் : பரபரப்பான காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2021, 12:31 pm
Youth Attack Police - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே சோதனை சாவடியில் போலீசார் மற்றும் இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வந்துள்ளனர்.

அப்போது உசிலம்பட்டி சாலையில் விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர்களின் வாகனம் ஒன்று போலீசார் அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.

அப்போது அங்கிருந்த போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போலீஸாருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து இளைஞர்கள் அருகில் இருந்த தென்னை மட்டையை எடுத்து போலீசாரை தாக்க தொடங்கினர்.

இதனையடுத்து போலீசாரும் அந்த இளைஞர்களுடன் மல்லு கட்டினர். இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போலீசார் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஏற்கனவே சேலத்தில் வியாபாரி ஒருவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தி சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதே போல நெல்லையில் குடிபோதை ஆசாமி ஒருவர் போலீசார் மீது சாக்கடையை வீசிய சம்பவமும் அரங்கேறியது. தமிழகத்தில் போலீசார் – பொதுமக்கள் மீதான மோதல் அதிகரித்து வருவதை தமிழக அரசு தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 387

0

0