Ford India | நஷ்டத்தில் ஃபோர்டு நிறுவனம் | அதிரடி முடிவால் சென்னை, குஜராத்தில் 4000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

Author: Dhivagar
9 September 2021, 5:51 pm
Ford Motor to cease production in India
Quick Share

அமெரிக்க வாகன நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தவும், இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியிலும் உள்ள அதன் இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வாகன உற்பத்தியைத் தொடர்வது லாபகரமானதாக இல்லை என்பதால் ஃபோர்டு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும், நிறுவனம் தனது உற்பத்தி செயல்பாடுகளை படிப்படியாக குறைக்க ஒரு வருடம் வரை ஆகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் ஃபோர்டு மறுசீரமைப்பு செயல்பாடுகள் என்ற பெயரில் நிறுவனம் பதிவிட்ட டீவீட்டின்படி, சென்னை & சனந்தில் வாகன உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளது. சனந்த் நகரில் உள்ள உற்பத்தி ஆலையில் 2021 ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏற்றுமதி உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு நிறுத்தப்படும் என்றும் மற்றும் 2022 ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சென்னை நகரில் இன்ஜின்/வாகன அசெம்பிளி ஆலைகள் மூடப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதிக்கு இன்ஜின் உற்பத்தி மட்டும் தொடரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனம் இறக்குமதி மூலம் மட்டும் தனது சில கார்களை தொடர்ந்து இந்தியாவில் விற்பனை செய்யும் என்றும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு டீலர்களுக்கு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள இந்த உற்பத்தி நிறுத்தத்தை அடுத்து ஈகோஸ்போர்ட், ஃபிகோ, எண்டேவர் மற்றும் ஆஸ்பயர் போன்ற கார்கள் எல்லாம் ஸ்டாக்  இருக்கும் வரை மட்டுமே விற்பனைச் செய்யப்படும். மற்ற SUV கள் மற்றும் மின்சார வாகனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மட்டுமே விற்பனைச் செய்யப்படும்.

சென்னையில் மட்டும் 2000 பேர் ஃபோர்டு நிறுவனத்தில் வேலைச் செய்து வருகின்றனர். சென்னை மற்றும் சனந்த் ஆலையில் உள்ள தொழிலாளர்கள், இந்தியா டீலர்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 4000 க்கும் மேற்பட்டோர் வேலை இழக்க நேரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து ஒரு காலத்தில் இந்தியாவில் வாகனத்துறையின் அதிவேக வளர்ச்சிக்கு ஆதரவளித்த ஃபோர்டு நிறுவனமும், இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தம் செய்யும் சமீபத்திய கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது வருத்தமளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Views: - 278

0

0