Whatsapp உரிமையாளரே Signal App தான் யூஸ் பண்றாராம்! என்ன “மார்க்” இதெல்லாம்..?
7 April 2021, 12:38 pmபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கைகளை மே 15 ஆம் தேதிக்குள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளதால் மக்கள் புதிதாக ஏதேனும் ஒரு பாதுகாப்பான செயலிக்கு மாறிவிட வேண்டும் என்று யோசித்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய பின்னடைவை வாட்ஸ்அப் சந்தித்து வருகிறது.
அதையடுத்து சமீபத்தில், உலகளவில் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தரவு கசிந்ததால் பேஸ்புக் நிறுவனத்தின் மீது மக்களுக்கு மேலும் அவநம்பிக்கை உருவானது. இப்போது பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களால் மேலும் வாட்ஸ்அப் பயன்பாடு பாதுகாப்பானது இல்லை என்ற அவப்பெயரும் உருவாகியுள்ளது.
வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மார்க் ஜுக்கர்பெர்க் சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவதாக டேவ் வாக்கர் எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளார்.
அதை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பது தெரிந்தால், அது இன்னும் சுவாரசியமான தகவலாக இருக்கும். சமீபத்தில் பேஸ்புக் தரவு கசிந்த போது மில்லியன் கணக்கான பயனர்களின் தகவளோடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களின் பெயர், இருப்பிடம், தொலைபேசி எண், திருமண விவரங்கள், பேஸ்புக் பயனர் ஐடி, பிறந்த தேதி போன்ற விவரங்களும் கசிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி கசிந்த தொலைபேசி எண் விவரங்களைப் பயன்படுத்தி மார்க் ஜுக்கர்பெர்க் சிக்னலைப் பயன்படுத்துகிறார் என்பதை இந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
ஏற்கனவே, பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் வாட்ஸ்அப் மீது எழுந்துள்ளதை அடுத்து, வாட்ஸ்அப் உரிமையாளரே தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சிக்னல் தான் பயன்படுத்துகிறார் என்ற தகவல் வாட்ஸ்அப் பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
1
0