யாரும் பட்டினி கிடக்கக்கூடாது… இளைஞரின் முயற்சியால் உருவானது “அரிசி ATM”!
25 September 2020, 6:52 pmதனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அரிசி ஏடிஎம் ஒன்றைத் திறந்துள்ளார். இதன் மூலம் ஊரடங்கு துவங்கியதிலிருந்து குறைந்தது 12,000 பேருக்கும் மேலானோர் பயனடைந்துள்ளனர். ராமு தோசபதி எனும் MBA பட்டதாரி, அடுத்த வேளை உணவுக்கு அரிசி இல்லாத எவர் வேண்டுமானாலும் ஐந்து நாட்களுக்கு போதுமான உணவு தானியங்களை இதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ராமு தோசபதியிடமிருந்து ஏராளமான மக்கள் அரிசி பெற்று வருகின்றனர்.
ஒரு அறிக்கையின்படி, அரிசி ஏடிஎம் LB நகரில் அமைந்துள்ளது. கோவிட் தொற்றுநோய்களின் போது வேலை இழந்து சம்பளம் இல்லாமல் தவிப்பவர்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு தோசபதியின் முயற்சி ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மட்டும் 100 க்கும் மேற்பட்டோர் இங்கிருந்து அரிசி பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தோசபதி நேரடியாக பல கோவிட் 19 நோயாளிகளின் குடும்பங்களுக்கும் அரிசி வழங்கி உள்ளார்.
“2006 ஆம் ஆண்டில் தோசபதி ஒரு விபத்தை சந்தித்து அவரது தலையில் காயம் ஏற்பட்டது. நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன், எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தால் நான் மக்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளித்தேன். யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்று நான் நினைக்கிறன். அதன் காரணமாகவே நான் இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் இங்கு வந்து அரிசி எடுத்துக்கொள்ளலாம்” என்று தோசபதி தன் முயற்சி குறித்தும் இந்த எண்ணம் தோன்றியதற்கான காரணத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிக்கன் கொண்டு கொடுப்பதற்கு ஒரு வாட்ச்மேன் குடும்பம் ரூ.2,000 செலவழிப்பதைக் கண்டதும் அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.” என்றும் தோசபதி கூறினார்.
இதனால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தோசபதி தனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தில் ரூ.3 லட்சத்தை அரிசி வாங்க செலவிட்டார். அவர் ஏழைகளுக்காக வேலை செய்வதைக் கண்ட வேறு சிலரும் அவருக்கு ஆதரவை வழங்கினார்கள்.
சமீபத்தில், ஆங்கில விரிவுரையாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவரும் இந்த ஏடிஎம்மில் இருந்து அரிசி பெற்றுக்கொண்டார். ஏனெனில் அவர் கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்று கூறினார். அரிசி ஏடிஎம் பற்றி அறிந்த அவர், தனது குடும்பத்திற்கு உணவு தானியங்களை சேகரிக்க அங்கு வந்தார். தோசபதியின் இந்த முயற்சியைப் பற்றி கேள்விப்படும் அனைவரும் அவரை மனமார பாராட்டி வருகின்றனர்.