பட்ஜெட் விலையில் உலக தரத்தில் இந்தியாவின் எலக்ட்ரிக் கார்….! இவ்வளவு கம்மி விலையா?! அசத்தும் மாருதி!

By: Dhivagar
5 February 2021, 3:29 pm
Upcoming Maruti Rs 7 Lakh Electric Car
Quick Share

இந்தியாவின் வாகன துறையின் எதிர்காலம் மின்சார வாகனங்கள் என்பது நம் எவராலும் மறுக்க முடியாத உண்மை என்றே சொல்லலாம். ஆம், இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் உற்பத்தியை குறைக்க அறிவுறுத்தி வருகின்றன.

Upcoming Maruti Rs 7 Lakh Electric Car

அந்த வகையில், நம் அனைவருக்கும் பரீட்சையமான டெஸ்லா மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் மிகவும் வெற்றிகரமாக இருந்து வருகிறது. அதன் தயாரிப்புகளை இந்தியாவில் நேரடியாக விற்கவும் இந்தியாவில் பெங்களூரில் ஒரு புதிய நிறுவனத்தை அமைத்து வருகிறது. சுமார் 55-60 லட்சம் விலையில் மாடல் 3 என்ற மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

அது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, இந்திய மக்களுக்கு மின்சார கார்களை வெறும் ரூ.7 லட்சம் விலையில் விற்க முடிவு செய்துள்ளது.

நீண்ட காலமாக இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த மாருதி சுசுகி, தனது வெற்றிகரமான வேகன்ஆர் பிராண்டின் கீழ் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது.

Upcoming Maruti Rs 7 Lakh Electric Car

மாருதி சுசுகி எலக்ட்ரிக் காரை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டதாகக் கூறப்பட்டாலும், மாருதி சுசுகி வேகன்ஆர் காரை இந்திய மக்களுக்கு வெறும் ரூ.7 லட்சம் எனும் பட்ஜெட் விலையில் வழங்க சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

வெளியான தகவலின்படி, இந்த கார் வெறும் 6 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது மற்றும் ஒரே சார்ஜிங்கில் 200 முதல் 250 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது.

தற்போது சந்தையில் இருக்கும் டாடா நெக்ஸன் மின்சார காரை விட திறன் சற்று குறைவாக இருந்தாலும், ​​மாருதி சுசுகியின் எலக்ட்ரிக் வேகன்ஆர் கார் விலை வரம்பைப் பொறுத்து பார்க்கையில் இந்திய சந்தைக்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில், 3 மின்சார கார்கள் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகியின் வேகன்ஆர், டாடாவின் அல்ட்ரோஸ் EV மற்றும் மஹிந்திராவின் eKUV 100 ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Upcoming Maruti Rs 7 Lakh Electric Car

இதன் மூலம் இந்தியா உலகின் மற்ற எந்த நாடுகளை விடவும் பின்தங்கியது இல்லை என்பதும், உலக தரத்துக்கு நிகராக இந்திய வாகன துறை தயாராகி வருகிறது என்பதும் நிரூபணம் ஆகிறது.

மிக முக்கியமாக சொல்லவேண்டுமெனில், பிரிட்டன் 2030 க்குள் 100% பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளது. மோசமடைந்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்தியாவும் இது போன்ற ஒரு பாதுகாப்பான சூழலுக்கு பசுமை வாகன கொள்கையை நோக்கி செல்கிறது என்பது தெளிவாகிறது.

Views: - 187

0

0