வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகளை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
16 January 2021, 1:26 pmமக்களிடையே வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளதால் அதற்கான காலக்கெடுவை வாட்ஸ்அப் நீட்டித்துள்ளது. முன்னதாக, புதிய தனியுரிமைக் கொள்கையைப் பயனர்கள் பயன்படுத்த அதன் புதிய சேவை விதிமுறைகளைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8 முதல் அதைப் பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது. இப்போது, புதிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வாட்ஸ்அப் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள ட்வீட்டின் அடிப்படையில், நிறுவனம் 2021 மே 15 வரை படிப்படியாக தனியுரிமைக் கொள்கையை மறுஆய்வு செய்ய மக்களுக்கு நேரம் கொடுக்கும். எனவே, முடிவு செய்ய போதுமான நேரம் இருப்பதால் உடனடியாக புதிய விதிமுறைகளைப் பற்றி பீதியடையத் தேவையில்லை.
வாட்ஸ்அப்பின் திடீர் அறிவிப்புக்கான காரணம், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற போட்டி பயன்பாடுகளுக்கு மக்கள் மாறியதே ஆகும். இதனால், தங்கள் பயனர்களை இழக்காமல் இருக்கவே வாட்ஸ்அப் அறிவிப்பை அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் கொள்கை விளக்கம்
வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக் உங்கள் தனிப்பட்ட செய்திகளை அணுகவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது. வாட்ஸ்அப் உங்கள் அழைப்புகளை கண்காணிக்காது, உங்கள் தொடர்புகளை ஃபேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளாது. உங்களால் பகிரப்பட்ட இருப்பிடம் மறைக்கப்பட்டிருக்கும், மேலும் குழு அரட்டைகளும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
உங்கள் செய்திகளை நீங்கள் மறைந்து போகும்படி அமைக்கலாம் என்றும், உங்கள் தரவையும் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் வாட்ஸ்அப் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை சுயமாக அழிக்கிறது. பயனர்கள் தங்கள் தரவைப் பதிவிறக்குவதற்கான அம்சமும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
அதன் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான உங்கள் செய்திகளின் தனியுரிமையை பாதிக்காது என்றும் வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது. வாட்ஸ்அப் கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் புதிய தனியுரிமைக் கொள்கை பயனர்கள் வணிகக் கணக்குகளுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதற்கானது என்றும், தனிப்பட்ட உரையாடல்கள் இதனால் பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தியது.
வாட்ஸ்அப் பலமுறை தெளிவுபடுத்திய போதிலும் பயனர்கள் இன்னும் நம்பவில்லை என்று தெரிகிறது. ஏனெனில், வாட்ஸ்அப் பயனர்கள் அதிக பாதுகாப்புள்ள ஆப்-களான சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்றவற்றிற்கு மாறி வருகிறார்கள். இரண்டு பயன்பாடுகளும் இந்தியாவிலும், மேலும் பல நாடுகளிலும் சிறந்த இலவச பயன்பாடுகளாக மாறியுள்ளன.
0
0