திமுகவின்‌ பொய்‌ வேஷம்‌… நீலிக்கண்ணீர் வடிக்கும் CM ஸ்டாலின் ; வழக்கம்‌ போல ஸ்டிக்கரை ஒட்ட முயற்சி – அண்ணாமலை

Author: Babu Lakshmanan
20 July 2023, 8:22 pm

தமிழக மீனவர்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இலங்கை அதிபர்‌ திரு ரனில்‌ விக்கிரமசிங்கே அவர்கள்‌, இரண்டு நாள்‌ பயணமாக புது டெல்லி வர உள்ளதை அடுத்து, தமிழக முதலமைச்சர்‌ திரு ஸ்டாலின்‌ அவர்கள்‌, மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ திரு நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு கடிதம்‌ எழுதியிருக்கிறார்‌. அந்தக்‌ கடிதம்‌ முழுக்க முழுக்க, கடந்த கால காங்கிரஸ்‌ திமுக கூட்டணி ஆட்சியின்‌ தவறுகளை எல்லாம்‌ வெளிப்படுத்தும்‌ ஒப்புதல்‌ வாக்குமூலமாகவே இருக்கிறது.

காங்கிரஸ்‌, திமுக கூட்டணி ஆட்சியின்‌ தவறுகளை சரி செய்ய, மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ மோடி அவர்களால்‌ மட்டும்தான்‌ முடியும் ‌என்று வெளிப்படையாக ஒப்புக்‌ கொண்டதற்கு, முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இலங்கையில்‌, தமிழ்‌ சகோதர, சகோதரிகள்‌ கொத்துக்‌ கொத்தாகக்‌ கொலை செய்யப்பட்டபோது, இங்கே காங்கிரஸ்‌ கூட்டணியில்‌ பசையான மத்திய அமைச்சர்‌ பதவியை வாங்க டெல்லிக்குப்‌ பறந்தவர்கள்‌, ஏதோ கடிதங்கள்‌ எழுதியே பிரச்சினைகளைத்‌ தீர்த்து விட்டதைப்‌ போல, இன்று பெருமையடித்துக்‌ கொண்டிருப்பது நகைக்கத்தக்கது.

திமுக ஆட்சியில்‌, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பாஜக தலைவர்‌ மதிப்புக்குரிய ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்‌, அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்தார்‌. தமிழகத்தில்‌ அன்று ஆட்சியில்‌ இருந்த திமுக, அந்த வழக்குக்குத்‌ தேவையான ஆவணங்களைக்‌ கூட நீதிமன்றத்தில்‌ வழங்காமல்‌, கச்சத்‌ தீவு, நம்‌ கைவிட்டுச்‌ செல்லக்‌ காரணமாக இருந்தது. திமுக அதன்‌ பின்னர்‌ பல முறை, பல கட்சிகளுடன்‌ சந்தர்ப்பவாத கூட்டணியில்‌ இருந்து, மத்திய அரசில்‌ அங்கம்‌ வகித்தபோதும்‌, கச்சத்‌தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை. கச்சத்‌தீவைத்‌ தாரை வார்த்த திமுக கும்பலுக்கு, கச்சத்‌ தீவு பற்றிப்‌ பேச என்ன தகுதி இருக்கிறது?

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக்‌ கொள்கிறேன்‌. உங்கள்‌ குடும்பத்தினர்‌ மத்திய அமைச்சர்‌ பதவி வாங்க, தமிழர்களின்‌ நலனை நீங்கள்‌ அடகு வைத்த அதே காலத்தில்‌, அன்றைய குஜராத்‌ முதல்வராக இருந்த மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ மோடி அவர்கள்‌, 2009 ஆம்‌ ஆண்டு, பஞ்சாப்‌ மாநிலம்‌ லூதியானாவில்‌ பொதுக்கூட்டத்தில்‌ பேசும்போது, இலங்கையில்‌ தமிழ்‌ மக்கள்‌ தாக்கப்படுவதற்குக்‌ கடும்‌ கண்டனம்‌ தெரிவித்து, அதனைக்‌ கண்டும்‌ காணாமல்‌ இருக்கும்‌ காங்கிரஸ்‌ மற்றும்‌ திமுக கட்சிகளைக்‌ கடுமையாகக்‌ கண்டித்தார்‌.

இலங்கைத்‌ தமிழர்கள்‌ பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்‌ என்று அன்றைய காங்கிரஸ்‌ அரசை வலியுறுத்தியவர்‌, உங்களை விட, தமிழ்‌ மக்கள்‌ மீது மிகுந்த அன்பு கொண்டவர்‌ பிரதமர்‌ மோடி அவர்கள்‌. இலங்கைத்‌ தமிழர்களுக்கு 51000 வீடுகள்‌, அவர்களுக்காக தொழிற்கூடங்கள்‌ அமைப்பு, தமிழர்‌ பகுதிகளில்‌ சுற்றுலாத்‌ துறையை மேம்படுத்த, இலங்கையின்‌ மற்ற பகுதிகளை இணைக்கும்‌ வண்ணம்‌ சாலை, ரயில்‌ போக்குவரத்து வசதிகள்‌, காங்கேசன்துறை துறைமுகத்தை தமிழகத்துடன்‌ இணைக்க கப்பல்‌ வசதி, யாழ்ப்பாண தமிழ்‌ கலாச்சார மையம்‌, சென்னையில்‌ இருந்து
விமானப்‌ போக்குவரத்து வசதி என, இலங்கைத்‌ தமிழர்கள்‌ வாழ்வு மேம்பட மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ மோடி அவர்கள்‌ செய்துள்ள நலப்பணிகள்‌ ஏராளம்‌.

இலங்கையில்‌ தமிழர்களுக்கு உரிமை வழங்கும்‌ 13ஆம்‌ சட்டத்திருத்தம்‌ கொண்டு வர, மாண்புமிகு பிரதமர்‌ மோடி அவர்கள்‌ இரண்டு முறை வலியுறுத்தியிருக்கிறார்‌. மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்‌ ஜெய்சங்கர்‌ அவர்கள்‌, கடந்த ஜனவரி மாதம்‌ இலங்கைப்‌ பயணத்தின்‌ போதும்‌ 13 ஆம்‌ சட்டத்‌ திருத்தம்‌ கொண்டு வர வலியுறுத்தியிருக்கிறார்‌. விரைவில்‌ அது அமலுக்கு வரும்‌ என்றும்‌ உறுதி தெரிவித்திருக்கிறார்‌.

இலங்கை மீனவர்கள்‌ கைது செய்யப்படுவது குறித்து நீலிக்கண்ணீர்‌ வடித்திருக்கிறார்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌. முன்பு எப்போதும்‌ இல்லாத அளவுக்கு, மீனவர்கள்‌ கைது செய்யப்பட்டால்‌, இந்திய அரசின்‌ வெளியுறவு துறை துரிதமாகச்‌ செயல்பட்டு, மீனவர்களுக்கு உடனடி சட்ட உதவிகளை வழங்கி மீட்டுக்‌ கொண்டு வருகிறது. அவர்கள்‌ உயிருக்கும்‌ உடமைகளுக்கும்‌ உத்தரவாதம்‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால்‌, திமுக காங்கிரஸ்‌ கூட்டணி ஆட்சியில்‌ மீனவர்கள்‌ உயிர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவியது. மத்தியில்‌, திமுக காங்கிரஸ்‌ கூட்டணியின்‌ பத்து ஆண்டு கால ஆட்சியில்‌, தமிழகத்தைச்‌ சேர்ந்த 85 மீனவர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. ஆனால்‌, மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ மோடி அவர்கள்‌ தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில்‌, ஸ்டாலினால்‌ அப்படி ஒரு நிகழ்வைக்‌ குறிப்பிட முடிந்ததா?

காங்கிரஸுடன்‌ மத்திய கூட்டணி ஆட்சியில்‌ இருந்த போது வாளாவிருந்துவிட்டு, தற்போது மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ மோடி அவர்கள்‌, திமுக காங்கிரஸ்‌ கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்சினைக்கும்‌ தீர்வு கொண்டு வரும்போது, வழக்கம்‌ போல தங்கள்‌ ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறது திமுக, என தெரிவித்துள்ளார்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 334

    0

    0