ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்… மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : ரூ. 4 லட்சத்தை இழந்ததால் விரக்தியில் விபரீத முடிவு!

Author: Babu Lakshmanan
27 March 2023, 12:06 pm
rummy-site - updatenews360
Quick Share

திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் இதுவரையில் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். அடுத்தடுத்து உயிர்பலிகளை ஏற்படுத்தும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையடுத்து, தமிழக அரசும் ஆன்லைன் தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதனை அவர் நிராகரித்து திருப்பி அனுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், மாநில அரசுகளுக்கு சில சட்டங்களை இயற்ற அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த வில்சன் (26) என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சத்தை இழந்ததால் கூலிதொழிலாளி வில்சன் தற்கொலை செய்து கொண்டாதாக போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருச்சியில் லூடோ விளையாட்டால் ஒருவர் தற்கொலை செய்த நிலையில், மேலும் ஒருவர் தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 276

0

0