நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை: இசைக்கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

5 July 2021, 3:53 pm
Quick Share

திருநெல்வேலி: கிராமக் கோவில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி அளித்து தங்களது நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மேளதாளம் முழங்க தவில் இசைக்கலைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்று விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் கோவில்களில் வழிபாடுகளை மேற்கொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருப்பதன் காரணமாக நாட்டுப்புற கலைகள், மேள தாளம், இசை வாத்தியம், வில்லிசை கலைஞர், கணியான் கூத்து கலைஞர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவும் வகையில், கிராம கோவில்களில் திருவிழாக்கள் திருமண நிகழ்ச்சிகளிலும் தங்களது இசை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் மேற்படிப்பு செலவிற்கு அரசு உதவித்தொகை வழங்குவதோடு, ஊரடங்கு காலம் முடியும் வரை குடும்ப பராமரிப்பு நிதியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றன. மேலும் அரசின் அனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் போது தங்களது கலைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்றும்,

நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். அதேபோன்று தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அமைப்பில் பதிவு பெற்றுள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கான ஓய்வூதியம் வயதை 50 என்றும், பெண் கலைஞர்களுக்கு 45 என்று நிர்ணயம் செய்து ஓய்வு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் மேளதாளம் இசை வாத்தியங்கள் வில்லிசை ஆகியவற்றை அரங்கேற்றம் செய்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Views: - 94

0

0