கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் தம்பியின் மனைவியை கொலை செய்த அண்ணன்

20 January 2021, 8:40 pm
Quick Share

திருவாரூர்: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் தம்பியின் மனைவியை அண்ணன் கொலை செய்த சம்பவம் திருவாரூர் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் ஈ.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி சொர்ண பிரியா தம்பதி. இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர் .இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் ராஜகோபால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வருகின்றனர். ராஜகோபால் திருவாரூரை அடுத்த திருக்கண்ணமங்கையில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரது மனைவி பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜகோபால் அவரது தம்பி சுந்தரமூர்த்தியின் மனைவி சொர்ணபிரியாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் கழுத்தில் குத்தி உள்ளார். இதனையடுத்து சொர்ண பிரியாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே சொர்ணபிரியா உயிர் பிரிந்துள்ளது. அங்கிருந்து தப்பித்த ராஜகோபால் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

காவல்துறை விசாரணையில் ரூபாய் 15 லட்சம் சொர்ண ப்ரியாவிடம் இருந்து தான் கடனாக வாங்கியதாகவும் தற்போது அந்த பணத்தை திரும்பத் தருமாறு தினசரி கேட்டு ஆபாசமாக பேசுவதாகவும் அதனால் ஆத்திரமடைந்து கத்தியால் சொர்ண பிரியாவை குத்தியதாக ராஜகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ராஜகோபால காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தம்பியின் மனைவியை அண்ணன் கொலை செய்த சம்பவம் திருவாரூர் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0