முன்விரோதம் காரணமா வழக்கறிஞர் படுகொலை: 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

13 October 2020, 9:34 pm
Quick Share

திருவாரூர்: வலங்கைமான் அருகே முன்விரோதத்தில் வழக்கறிஞரை கொலை செய்த மர்மநபர்களை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அரித்துவாரமங்கலம் அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜ்குமார் (35), இவரது மனைவி வழக்கறிஞர் சந்தியா (34) இவர்கள் இருவரும் நீடாமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முனியூரில் தனது வீட்டின் அருகே உள்ள வாய்க்கால் கட்டையில் நேற்று இரவு ராஜ்குமார் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அதன் பின்னர் கிளம்பிச் சென்ற ராஜ்குமார் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நிலையில் ராஜ்குமாரின் குடும்பத்தினர் தேடிப் பார்த்தபோது முனியூர் வாய்க்காலில் சடலமாக வெட்டுக் காயங்களுடன் ராஜ்குமாரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலையாளிகள் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு அவரது செல்போனையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

ராஜ்குமாருக்கு நேரடியாக எவ்வித முன்விரோதமும் இல்லை என கூறப்படுகிறது. அதே சமயம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் முனியூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதன் காரணமாக கள்ளச் சாராய விற்பனையில் ஏதேனும் முன்விரோதம் ஏற்பட்டதா? அல்லது வழக்குகளில் ஆஜரான அதன் அடிப்படையில் கோபம் அடைந்த அவர்கள் செயலில் ஈடுபட்டார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட திருவாரூர் எஸ்பி துரை, 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேட உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 33

0

0