கொரோனா ஓவர்.. ஆனா இருக்கு.. இன்னும் ரெண்டு இருக்கு..! எச்சரிக்கும் பில்கேட்ஸ்
6 February 2021, 10:52 amகொரோனா குறித்து 2015 ஆம் ஆண்டு தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ், எதிர்காலத்தில் மனிதகுலத்துக்கு மேலும் இரண்டு பேரழிவுகள் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
எபோலா வைரஸ் பரவல் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ‘டெட் டாக்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பில்கேட்ஸ், எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். எபோலா வைரஸ் காற்றில் பரவாததால், நாம் தப்பித்திருக்கிறோம். ஆனால் வருங்காலத்தில் காற்றில் பரவும் தன்மை கொண்ட வைரஸ்கள் உருவாக கூடும். ஆனால் அதனை எதிர்கொள்ள நாம் இன்னும் தயாராகவில்லை. சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
கொரோனா பரவிய சமயம், அவரது இந்த பேச்சு வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் பில்கேட்ஸ் விடுத்த எச்சரிக்கையை கேட்டு உலக நாடுகள் சுதாரித்திருந்தால், இவ்வளவு பின்விளைவுகளை சந்தித்திருக்க தேவை இல்லை என நெட்டிசன்கள் பலரும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேலும் இரு பேரழிவுகள் மனித குலத்திற்கு ஏற்படும் என பில்கேட்ஸ் மீண்டும் ஆருடம் கூறி உள்ளார்.
சமீபத்தில் பிரபல யூடியூபர் டெரிக் முல்லர் என்பரின் யூடியூப் சேனலுக்கு பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், பருவநிலை மாற்றமும், பயோ தீவிரவாதமும் மனித குலத்தை அழிக்க காத்திருக்கின்றன என தெரிவித்தார். கொரோனாவால் இறந்தவர்களை விட, பருவநிலை மாற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், பயங்கரவாதிகளால் உருவாக்கப்படும் உயிர்கொல்லி வைரஸ்கள், தொற்றுநோய்களை காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்தும் எனவும் ஆருடம் கூறி உள்ளார். ஆனால், தனது ஆருடங்களை தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0
0