அனுதாப ஓட்டுக்களை அள்ள தன்னைத் தானே கடத்திய பெண்..! அமெரிக்க மேயர் தேர்தலில் கலகலப்பு..!

23 August 2020, 3:38 pm
Sabrina_Belcher_Democratic_Mayor_Candidate_Fake_Conspiracy_South_Carolina_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் தென் கரோலினாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவர் வாக்குகளைப் பெறுவதற்காக, தன்னைத் தானே போலியாகக் கடத்தி நாடகமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சப்ரினா பெல்ச்சர் சதித்திட்டம் தீட்டியதாகவும், போலி கடத்தலுக்குப் பிறகு தவறான போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பேஸ்புக் நேரலையில் ஒரு வீடியோவில் செவ்வாய்க்கிழமை அவர் வீடு கொள்ளையடிக்கப்பட்டு, அவரை தாக்கி கடத்தியது போல் ஒரு வீடியோ வெளியானது. பின்னர் விசாரணையில், தேர்தலுக்கு முன்னர் அனுதாப ஓட்டுக்களைப் பெறுவதற்காக பெல்ச்சர் முழு சம்பவத்தையும் ஏற்பாடு செய்தது வெட்ட வெளிச்சமானது.

“நவம்பர் தேர்தலில் விளம்பரம், அனுதாபம் மற்றும் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்கள் ஒரு கடத்தல் நாடகத்தை நடத்தினர்” என்று போலீசார் கூறியதாக தி போஸ்ட் மில்லினியலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கடத்தலுக்குப் பிறகு, கொள்ளை முயற்சியின் போது தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பெல்ச்சரை கடத்தியதாகக் கூறப்படும் நபர் கிறிஸ்டோபர் ஜேம்ஸ் எடி என கண்டறியப்பட்டுள்ளது. இந்த போலி கடத்தல் நாடகத்திற்காக கிறிஸ்டோபர் பணமும் பெற்றார் என்று சம்ப்டர் காவல் துறை கூறியுள்ளது.

தென் கரோலினாவில் மேயர் பதவிக்கு பெல்ச்சருடன் மேலும் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உள்ளூர் அரசியலில் கொண்டுள்ள ஈடுபாடு மட்டுமல்லாது ராப் இசையையும் பெல்ச்சர் செய்கிறார்.

இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தென் கரோலினாவின் முதல் கறுப்பின மேயராக அடையாளப்படுத்தப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அனுதாப ஓட்டுக்காக தன்னைத் தானே கடத்தி, போலீசிடம் சிக்கியுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0