சீனாவுக்கு செக் வைக்கும் ஐந்து நாடுகளின் கூட்டு போர் ஒத்திகை இன்று தொடக்கம்..! முதல்முறையாக இந்தியாவும் பங்கேற்பு..!

5 April 2021, 6:20 pm
indian_navy_ship_La_Perouse_UpdateNews360
Quick Share

முதல் முறையாக கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இன்று முதல் ஏப்ரல் 7 வரை பிரெஞ்சு ராணுவத்தால் நடத்தபப்டும் லா பெரஸ் எனும் கடல்சார் கூட்டு போர்ப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. இந்திய கடற்படைக் கப்பல்கள் ஐ.என்.எஸ் சாத்புரா (ஒரு ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன்) மற்றும் ஐ.என்.எஸ் கில்டானுடன் பி 8 ஐ நீண்ட தூர கடல் ரோந்து விமானமும் இதில் இந்திய கடற்படை சார்பாக பங்கேற்கின்றன.

“இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பிரெஞ்சு கடற்படை, ராயல் ஆஸ்திரேலிய கடற்படை, ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் அமெரிக்க கடற்படை ஆகியவற்றுடன் மூன்று நாள் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.” என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு கடற்படை தலைமையிலான லா பெரஸ் என்ற இந்த கூட்டு போர் பயிற்சியில், பிரெஞ்சு கடற்படை சார்பாக ஷிப்ஸ் டோனெர்ரே எனும் தாக்குதல் கப்பல் மற்றும் ஃபிரிகேட் சர்கோஃப் ஆகியவை பங்கேற்கின்றன. அமெரிக்க கடற்படை சார்பில் சோமர்செட் என்ற கடற்படை போக்குவரத்து கப்பல் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் அன்சாக் எனும் போர் கப்பல் மற்றும் சிரியஸ் எனும் டேங்கர் கப்பல் போர் பயிற்சியில் பங்கேற்க பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் கடல்சார் தற்காப்பு கடற்படை அக்போனோ எனும் போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. கப்பல்களுக்கு மேலதிகமாக, கப்பல்களில் உள்ள ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளது.

லா பெரூஸ் போர் ஒத்திகையில் மேற்பரப்பு போர், வான்வழி எதிர்ப்பு மற்றும் வான் பாதுகாப்பு பயிற்சிகள், ஆயுத துப்பாக்கி சூடு பயிற்சிகள், கப்பல்களுக்கிடையே பறக்கும் நடவடிக்கைகள், தந்திரோபாய திட்டங்கள் மற்றும் கடலில் நிரப்புதல் உள்ளிட்ட மேம்பட்ட கடற்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

“இந்த பயிற்சியில் இந்திய கடற்படையின் பங்கேற்பு நட்பு கடற்படையினருடன் பகிரப்பட்ட மதிப்புகளை நிரூபிக்கிறது. இது கடல்களின் சுதந்திரத்தை உறுதிசெய்கிறது மற்றும் திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய சுதந்திர இந்தோ-பசிபிக் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு அர்ப்பணிப்பு அளிக்கிறது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை மேலும் கூறியது.

கடந்த 2019’இல் பிரெஞ்ச கடற்படை ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன் தொடங்கிய இந்த போர் பயிற்சியில் இந்த முறை இந்தியாவும் சேர்ந்துள்ளதன் மூலம், இது குவாட் கூட்டமைப்பு பிளஸ் பிரான்ஸ் எனும் நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போர் ஒத்திகை கிழக்கு இந்திய பெருங்கடலில் நடத்தட்டப்படுவதால், இது முழுக்க முழுக்க வளர்ந்து வரும் சீன அச்சுறுத்தலுக்கு செக் வைக்கும் விதமாகவே இந்த போர் ஒத்திகை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0

Leave a Reply