ஜெர்மனியில் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்..!!

15 July 2021, 4:03 pm
Quick Share

ஜெர்மனியில் பெய்த கனமழையால் அந்நாட்டின் மத்திய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புயல் மையம் கொண்டதால் ஒரே இரவில் பெய்த கனமழையால் ஜெர்மனியில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகரில் கார்கள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளில் மக்கள் புகுந்ததால் மக்கள் மாற்று இடங்களுக்கு அடைக்கலம் தேடும் நிலை ஏற்பட்டது. பல இடங்களில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கட்டிடங்களும் சேதமடைந்தது.

மேலும் ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு என்ற டவுன் பகுதியில் மழைக்கு 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுதவிர, 25 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. 30 பேர் வரை காணாமல் போயிருக்கின்றனர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் உள்ளூர்வாசிகள் தவித்து வரும் சூழலும் காணப்படுகிறது. வான்வழியே வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் போலீசாரோடு சேர்ந்து, ஜெர்மனியின் ராணுவமும் மீட்பு பணியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டும் வருகிறது.

Views: - 171

0

0