கடும் வீழ்ச்சியில் பொருளாதாரம்..! நிதிச் சுமையை சமாளிக்க பூங்காவை அடமானம் வைத்து கடன் பெற பாகிஸ்தான் அரசு முடிவு..?

24 January 2021, 8:41 pm
Imran_khan_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் சீரழிந்த பொருளாதாரத்தை சமாளிக்க, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய பூங்காவை 500 பில்லியன் டாலர் கடன் பெற அடமானம் வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமார் 500 பில்லியன் டாலர் கடன் பெற எஃப் -9 பூங்காவை அடமானம் வைக்கும் திட்டம் சேர்க்கப்படும் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீடியோ கான்பெரன்ஸ் மூலம் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மதர்-இ-மில்லத் பாத்திமா ஜின்னாவின் பெயரிடப்பட்ட எஃப் -9 பூங்கா 759 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பசுமையான பகுதிகளில் ஒன்றாகும்.

பாகிஸ்தான் அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு முக்கிய நாடுகளுடனான உறவு கடுமையாக சீர்குலைந்துள்ளதால், வழக்கமாக வரக்கூடிய நிதி வந்து சேராததால், பாகிஸ்தான் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், சவூதி அரேபியா 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை முன்கூட்டியே திருப்பித் தருமாறு பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டது. பாகிஸ்தான் அதன் தற்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை விரைவாக அனுப்பி பதட்டங்களைத் தணிக்க முயன்றது. எனினும், சவூதி அரேபியா அதன் கோரிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.

இதே போல் ஐக்கிய அரபு அமீரகம், சமீபத்தில் பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு வேலை விசா வழங்க தடை விதித்ததால், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வரும் அன்னியச் செலாவணியில் தடை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டு தடையை நீக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து விட்டது.

இதனால் வேறுவழியின்றி, நிதிச் சுமையை சமாளிக்க, அரசின் சொத்துக்களை அடமானம் வைக்கும் முடிவிற்கு இம்ரான் கான் அரசு தள்ளப்பட்டுள்ளது.

Views: - 0

0

0