சர்மா ஒலியின் கட்சியையே செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்..! நேபாள அரசியலில் புதிய குழப்பம்..!

8 March 2021, 9:27 am
kp_sharma_oli_nepal_updatenews360
Quick Share

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் புஷ்ப கமல் தஹால் பிரச்சந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்-மையம்) ஒன்றிணைந்ததை நேபாள உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. நேபாளத்தில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் இது இரு தலைவர்களுக்குமே மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

சர்மா ஒலி மற்றும் பிரச்சந்தா கட்சிகள் 2017 பொதுத் தேர்தலில் தங்கள் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து, மே 2018 இல் ஒன்றிணைந்து ஒரு ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கின.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிபதிகள் குமார் ரெக்மி மற்றும் பாம் குமார் ஸ்ரேஸ்தா ஆகியோரின் உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பு குறித்த தீர்ப்பை வெளியிட்டது. 

சர்மா ஒலி மற்றும் பிரச்சந்தா கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு முன்னதாகவே நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ரிஷிராம் கட்டேல் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்திருந்தார். ரிஷிராம் கட்டேலுக்கு ஆதரவாக தற்போது நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதேபோன்ற பெயரில் ஒரு கட்சி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கட்டேலின் வழக்கறிஞர் தண்டபாணி பவுடெல் தெரிவித்துள்ளார்.

சர்மா ஒலி மற்றும் பிரச்சந்தா காட்சிகள் தற்போது இணைப்புக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்றும் அவை ஒன்றிணைந்தால், அரசியல் கட்சிகள் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், 2017’ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன்னர் பிரச்சந்தா கட்சி வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை மாறும்.

இரு கட்சிகளும் தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்துடன் தேர்தல் கூட்டணியை உருவாக்கியிருந்தன. 2017 தேர்தலில், சர்மா ஒலி கட்சி 121 இடங்களையும், பிரச்சந்தா கட்சி 53 இடங்களையும் வென்றது.

சீன சார்பு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற ஒலி, ஆச்சரியமான ஒரு நடவடிக்கையாக, பிரச்சந்தாவுடனான அதிகார மோதலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தை கலைத்தார். 275 உறுப்பினர்களைக் கொண்ட சபையை கலைக்க ஒலி எடுத்த நடவடிக்கையால் கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒலி மற்றும் போட்டி குழு இருவரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுகின்றன. மேலும் இந்த பிரச்சினை தேர்தல் ஆணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் கட்சியே தற்போது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், ஒலி மற்றும் பிரச்சந்தா ஆகியோர் மீண்டும் கட்சியின் ஒற்றுமையை காப்பாற்ற விரும்பினால் தங்கள் கட்சிக்கு வேறு பெயரை முன்மொழிந்து தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் விண்ணப்பம் தாக்கல் செய்ய நீதிமன்றம் வாய்ப்பு அளித்துள்ளது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குள் பிரதமர் ஒலி தனது கட்சியின் நாடாளுமன்றக் கட்சியின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Views: - 15

0

0