பிரதமர் மீதே தேசத்துரோக வழக்கு..! பாகிஸ்தான் போலீஸ் அதிரடி..!

Author: Sekar
7 October 2020, 10:30 am
POK_Prime_Minister_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரின் பிரதமராக உள்ள ஃபாரூக் ஹைதர் கான், பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாக லாகூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக அவரது கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் சமீபத்திய ஆன்லைன் உரையை கேட்டதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ராணுவத்திற்கு எதிராக சதி செய்ததற்காக லாகூரில் உள்ள ஷஹ்தாரா காவல் நிலையத்தில் பி.எம்.எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப், பாரூக் ஹைதர் கான் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக இஸ்லாமாபாத் வட்டாரங்கள் தெரிவித்தன.

சைபர் பயங்கரவாதம், பாகிஸ்தானுக்கு எதிராக போரை நடத்துவதற்கான கிரிமினல் சதி, பாகிஸ்தானை உருவாக்கியதை கண்டனம் செய்தல், அதன் இறையாண்மையை ஒழிப்பதை ஆதரித்தல், தேசத்துரோகம் மற்றும் பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்ப்பது தொடர்பான பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

கடந்த வாரம் பி.எம்.எல்-என் மத்திய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் மரியம் நவாஸ், ராணா சனாவுல்லா, அஹ்சன் இக்பால், ஷாஹித் ககான் அப்பாஸி, பர்வேஸ் ரஷீத், மரியம் அவுரங்கசீப் மற்றும் அதாவுல்லா தாரர் ஆகியோரும் அடங்குவர்.

பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இது வரை அறிவிக்கவில்லை. அதற்கென ஒரு தனி அரசியலமைப்பு, பிரதமர் உள்ளிட்ட ஒரு நாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகள் உள்ளன. 

இந்நிலையில் பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்கள் மீது அரசியல் ரீதியாக வழக்குப் போடுவதைக் கூட ஒரு பக்கம் ஏற்றுக்கொண்டாலும், தனது ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் பிரதமர் மீது தேசத் துரோக வழக்கு எப்படி போடலாம் என பாகிஸ்தான் மக்கள் இந்த நடவடிக்கையை எள்ளி நகையாடி வருகின்றனர்.

போகிற போக்கில் இவர்கள் இந்திய பிரதமர், அமெரிக்க அதிபர் மீது கூட தேசத் துரோக வழக்கு போட்டாலும் போடுவார்கள் என நெட்டிசன்கள் இதை கலாய்த்து வருகின்றனர்.

அதே சமயம் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, வரும் நவம்பரில் தேர்தல் நடத்தி பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த மாகாணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை மாற்றும் திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது வழக்குப் பதிவு செய்து ஆழம் பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Views: - 45

0

0