ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்தால் ஆபத்து…இலங்கை அரசுக்கு விக்ரமசிங்கே வலியுறுத்தல்

Author: kavin kumar
22 August 2021, 7:49 pm
Quick Share

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சியை இலங்கை அரசு அங்கீகரித்தால் தீவிரவாதத்துக்கு உதவுவதற்கு சமம், ஆதலால், அங்கீகரிக்கக் கூடாது என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.இதனால் ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி நிறுவப்பட உள்ளது. இதில் ஆப்கன் அதிபராக தலிபான்கள் இயக்கத் தலைவர் வருகிறாரா, அல்லது கடந்த 1995-ம் ஆண்டில் இருந்தது போன்று நிர்வாகக் குழு அமைத்து ஆப்கனை நிர்வகிக்கப் போகிறார்களா என்பது தெரியவில்லை. ஆப்கனின் அரசியல் நகர்வுகளை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய அல்-கொய்தா பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு தலிபான்கள் ஆதரவு கொடுத்தார்கள். இப்போது மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் சர்வதேச பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஒரு போதும் ஆதரவாக இருக்கக்கூடாது. அந்த வகையில் தலிபான்களுக்கு எதிரான நிலையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும். மேலும் தலிபான்களால் புத்த மதத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே அவர்கள் ஆட்சி காலத்தில் பாமியானில் உள்ள புத்தர் சிலைகளை அவர்கள் உடைத்தார்கள். அவர்கள் புத்த மதத்திற்கு எதிரானவர்கள். எனவே அவர்களை ஒருபோதும் இலங்கை ஆதரிக்கக் கூடாது.இவ்வாறு ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

Views: - 346

0

0