பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய இங்கிலாந்து திட்டம்?…
17 November 2020, 2:45 pmபெட்ரோல், டீசல் கார்களை தடை செய்வதற்கு இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் வெப்பமயதால் விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெப்பமயமாதலின் காரணமாக உலகஅளவில் கால நிலை மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நம் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர்.
காற்றில் பரவும் கார்பன்டை ஆக்ஸைடு அளவின் அதிகரிப்பது கால நிலை மாற்றத்துக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதன்ஒரு பகுதியாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைத் தடை செய்ய சர்வேதேச நாடுகள் திட்டமிட்டுவருகின்றன. இந்தியாவில், பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் 2040-ம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் கார்களை முழுவதுமாக தடை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், 2035-ம் ஆண்டிலேயே பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்வதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிருந்தார்.
இந்நிலையில், 2030ம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் கார்களுக்குத் தடைவிதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.