மீண்டும் மொபைல் செயலிகள் தடையால் விரக்தி..! இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த சீனா..!

25 November 2020, 1:48 pm
India_China_Relationship_UpdateNews360
Quick Share

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலனுக்காக வர்த்தக உறவுகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என சீனா இன்று இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 43 சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியா நேற்று தடை விதித்ததன் காரணமாக சீனா வருத்தமடைந்துள்ளதாக வெளியான தகவல்களின் பின்னர் இந்த அறிக்கை சீனத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. 

புதுடெல்லியில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, “சீனாவும் இந்தியாவும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கான வாய்ப்புகள். இரு தரப்பினரும் பரஸ்பர நன்மைக்காகவும், வெற்றிக்காகவும் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை சரியான பாதையில் கொண்டு வர வேண்டும். உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவுகளை அமல்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

அலிஎக்ஸ்பிரஸ், டிங்டாக் உள்ளிட்ட சீன பின்னணியுடன் செயல்படும் 43 மொபைல் செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்திய அரசு எடுத்த முடிவு தொடர்பான ஊடக கேள்விக்கு தூதரகம் இவ்வாறு பதிலளித்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, சீனப் பின்னணியுடன் உள்ள சில மொபைல் செயலிகளைத் தடைசெய்வதற்கான ஒரு சாக்குப்போக்காக இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை உறுதியாக எதிர்க்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தூதரகம் மேலும் கூறுகையில், சீன அரசாங்கம் “எப்போதும் வெளிநாட்டு சீன நிறுவனங்களுக்கு சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும். செயல்படும் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் மற்றும் பொது ஒழுங்கு மற்றும் நல்ல ஒழுக்கங்களுக்கு இணங்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

கடந்த மே மாதம் முதல் சீனாவின் ஆக்கிரமிப்பு மனநிலையால், இந்தியாவும் சீனாவும் எல்லையில் மோதலை எதிர்கொண்டுள்ள நிலையில், மத்திய அரசு சீனாவுக்கு எதிராக எடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நடவடிக்கையால், சீனா செய்வதறியாது மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளது எனவும், அதனால் தான் வழக்கத்திற்கு மாறாக இது போன்ற அறிக்கைகளை விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Views: - 0

0

0