பூஜையுடன் தொடங்கிய அதர்வாவின் புதிய படம்!

Author: Udhayakumar Raman
9 March 2021, 11:33 pm
Quick Share

அதர்வா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அதர்வா. நடிகர் முரளியின் மகன் என்பதால், அதர்வாவுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பானா காத்தாடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அதர்வா அறிமுகமானார். ஆனால், பாலா இயக்கத்தில் வந்த பரதேசி படம் அதர்வாவுக்கு நல்லவொரு அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் உருவாகியிருந்த 100 படம் வெளியானது. அதன் பிறகு எந்தப் படமும் திரைக்கு வரவில்லை. தற்போது, தள்ளி போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, புதிதாக, இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரமோத் பிலிம்ஸ் (Pramod Films) நிறுவனம் தயாரிக்கிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என்று பல மொழிகளில் இந்நிறுவனம் 24 படங்கள் வரை தயாரித்துள்ளது.


இந்நிறுவனத்தின் 25ஆவது படமாக தற்போது அதர்வாவின் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் பூஜை நேற்று மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது. அதோடு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது: எங்களது நிறுவனத்தின் மூலமாக 25 ஆவது படமான தமிழ் படத்தை தயாரிப்பது மகிழ்ச்சி.
தமிழ் ரசிகர்கள் எப்போதும் நேர்த்தியான படைப்புகளை கொண்டாடி வருகின்றனர். இதற்கு மாதவன் நடித்த மாறா படமே சிறந்த உதாரணம்.

இதே போன்று உங்களது அன்பும், ஆசியுடனும் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் எங்களது பிரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25 ஆவது படைப்பை தொடங்கியுள்ளோம். சாம் ஆண்டன் மற்றும் அதர்வா கூட்டணியில் இதற்கு முன்னதாக 100 படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது அதர்வா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் ஆக்‌ஷன் கலந்த கலவையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 211

1

0