“உன் வீட்ல பெண்கள் இல்லையா?” இரண்டாம் குத்து டீசரை பார்த்து பொங்கி எழுந்த பாரதிராஜா !

Author: Udayaraman
8 October 2020, 8:17 pm
Quick Share

நேற்று ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகள் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தார்கள் . இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று கேட்க்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இப்படம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை :

சினிமா வியாபாரமும் தான்… ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்”என்று அறிக்கை மூலமாக கொந்தளித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் தனது டுவிட்டர் வலைதள பக்கத்தில் பாரதிராஜா எடுத்த tik.tik.tik படத்தில் வரும் பிகினி அணிந்த ஹீரோயின்களின் புகைப்படங்களை போட்டு அப்போது கூசாத கண்ணு இப்போ கூசுதா என்று நக்கலாக பதிலளித்துள்ளார்.

Views: - 52

0

0