என் முன்னால் வளர்ந்த குழந்தை… ரொம்ப உடஞ்சு போயிட்டேன் : புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்த உருக்கம்
Author: Babu Lakshmanan10 November 2021, 1:03 pm
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு மறுநாளே, கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வரும் நிலையில், பலர் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புனித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தனது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியின் மூலம் தற்போது புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:- ‘நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார். அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0