விக்ரமன் பட கிளைமாக்ஸ் ஆக மாறிய பிக்பாஸ் வீடு- நெகிழ்ச்சியில் போட்டியாளர்கள்

10 January 2021, 1:34 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 90 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நேற்று நடந்த சம்பவம் தான் இந்த சீசனில் உருப்படியான விஷயம் என மக்கள் பேசும் அளவு ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சீசன் 1 முதல் 3 வரை காயத்ரி ரகுராம், ஓவியா, ஐஸ்வர்யா தத்தா, மீரா மிதுன், வனிதா என பெண்கள் தான் சண்டைக்கோழிகளாக இருந்துள்ளனர். ஆனால் இந்த சீசனில் ஆரியும் பாலாஜியும் நேருக்கு நேராக சண்டை போட்டுக்கொள்வது மட்டும்தான் பாக்கி என்ற அளவில் சண்டக்கோழியாகி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை திறந்தாலே இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள்தான் மக்கள் கண்முன் வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று நடந்த விஷயம் அதையெல்லாம் கவுத்து போடுவது போல் மொத்தமாக மாறிப் போயிருந்தது. இதுவரை ஒரு முறையோ இரு முறையோ பேருக்கு ஆரியிடம் மன்னிப்பு கேட்டார் பாலாஜி. ஆனால் நேற்று முதல்முறையாக ஆரி கண்கலங்கி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டது நெகிழ்வை ஏற்படுத்தியது.

கயிறு இழுக்கும் டாஸ்கில் பாலாஜி கையை எடுத்தவுடன், ஆரி பாலாஜியை சில கடுமையான சொற்களைப் பயன்படுத்தி திட்டினார். அதனால் கோபப்பட்ட பாலாஜி கயிற்றில் இருந்து கையை எடுத்து அவுட்டாகி வெளியேறினார். அவ்வாறு ஆரி திட்டாமல் இருந்திருந்தால் பாலாஜி அதில் வெற்றி பெற்று ஏழு புள்ளிகள் பெற்று இருப்பார். இதனையடுத்து தான் செய்த தவறை உணர்ந்த ஆரி, “என்னால்தான் கயிற்றில் இருந்து கையை எடுத்து இந்த போட்டியில் இருந்து வெளியேறினாய். கையை எடுத்த மற்றவர்களுக்கு எல்லாம் புள்ளிகள் கிடைத்திருக்கிறது.

ரூல்ஸ் எல்லாம் பேப்பர் வரைக்கும்தான் போல” என கண்கலங்கி வருத்தமடைந்து மன்னிப்பு கேட்டார். இதை மென்மையாக எடுத்துக்கொண்ட பாலாஜி, “சரி விடுங்க முடிந்தது முடிந்துவிட்டது” என்று ஆறுதல் கூறினார். மேலும் “இதுவரை நான் உங்களிடம் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெளியே வந்தாலும் நான் உங்களிடம் ஆலோசனைகள் கேட்பேன்” என்று கூறினார். அதற்கு ஆரியும் “கண்டிப்பாக உனக்கு என்னால் முடிந்ததை செய்வேன்” என்று கூற, இத்தனை நாள் ஹரி படம் போல ஆக்ஷன் ஆக போய்க்கொண்டிருந்த வீடு நேற்று ஒரே நாளில் விக்ரமன் படம் போல் ஆகிவிட்டது.

மேலும் இதை வீடியோக்களை போட்டு சுட்டிக்காட்டிய கமல் கடைசி நேரம் என்றாலும் பாலாஜியின் இந்த மாற்றம் அவரிடம் மட்டுமில்லாமல் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். ஆரியும் பாலாஜியும் சமாதானமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற போட்டியாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.

Views: - 42

0

0