வீட்டில் சுக்கு இருந்தால் இனி தொட்டதுக்கெல்லாம் மருந்து மாத்திரை தேடி ஓட மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
1 July 2023, 10:59 am
Quick Share

சுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம். சுக்கில் காணப்படும் ஜின்ஜரால் மற்றும் சோகால் போன்ற வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாகிறது. எந்தெந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு சுக்கை கை வைத்தியமாக பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

பொதுவாக சுக்கை பயன்படுத்துவதற்கு அதன் மீது சுண்ணாம்பை பூசி வெயிலில் உலர்த்த வேண்டும். பின்னர் அதன் மேல் தோலை சுரண்டி விட்டு அதன் பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும். மதிய உணவின்போது சுக்கை பயன்படுத்துவதால் வாயு கோளாறுகள் பிரச்சனை குணமாகிறது. பொதுவாக அரிசி மாவு மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் அதிரசத்தில் சுக்கு பொடி சேர்க்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் சுவையான அந்த அதிரசத்தை அதிகமாக சாப்பிட்டாலும் உடல் கெடாமல் இருப்பதற்காக அது மருந்தாக செயல்படுகிறது.

பித்தம் காரணமாக வாந்தி, குமட்டல் மற்றும் தலை சுற்றல் போன்றவை ஏற்படும்பொழுது சுட்டுவிரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் ஆகியவற்றை சேர்த்து எடுக்கும் அளவு சுக்கு எடுத்து அதனுடைய தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர பித்தம் விரைவில் குணமாகும்.

சுக்குடன் நீர் சேர்த்து குழைத்து நெற்றியில் பற்று போட்டு வர தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். அதையே தொண்டையில் தடவும் பொழுது தொண்டை கட்டு, தொண்டையில் வலி, கரகரப்பு ஆகியவை நீங்கிவிடும். மேலும் நெற்றியில் இருக்கக்கூடிய புருவங்கள் மீது பூசி வர கிட்ட பார்வை குணமாகும் என்று சொல்லப்படுகிறது. சுக்கு பொடியோடு துளசி சாறு ஒரு தேக்கரண்டி துளசி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி வெற்றிலை சாறு சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெஞ்சு சளி ஆகியவை குணமாகும்.

மஞ்சள் காமாலைக்கு சுக்கு அற்புதமான தீர்வாக அமைகிறது. இதற்கு சுக்கு பொடியோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி புதினா சாறு மற்றும் சிறிதளவு தேன் ஆகியவை கலந்து சாப்பிட்டு வர கல்லீரல் பலமாகி மஞ்சள் காமாலை குணமாகும். சுக்கு பொடியோடு சம அளவு புதினா சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் பறந்து போகும்.

பல் வலி ஏற்படும் போது, வலி இருக்கக்கூடிய பல்லில் சுக்கை வாயில் வைத்து சிறிது நேரம் அடக்கி வைத்திருந்தால் பல் வலி குறையும். சுக்குடன் 15 துளசி இலைகளை கொதிக்க வைத்து கஷாயமாக எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும். மேலும் சுக்கு பொடியோடு ஐந்து முதல் ஆறு பூண்டு பற்களை கொதிக்க வைத்து, அந்த ஆவியை சுவாசிக்கும் பொழுது ஆஸ்துமா நோயினால் ஏற்படும் மூச்சு திணறல் தணியும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 5990

0

0