நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஆபத்து உண்டாகுமா???

Author: Hemalatha Ramkumar
30 June 2023, 4:01 pm
Quick Share

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற பழமொழிக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினத்தாலும் உயிர் வாழ முடியாது. மனித உடல் உறுப்புகள் அதன் வேலைகளை செய்வதற்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. சரியாக செயல் புரிய மூளைக்கு 80 சதவீத தண்ணீரும், நுரையீரலுக்கு 90 சதவீத தண்ணீரும், ரத்தத்திற்கு 83 சதவீத தண்ணீரும், எலும்புகளுக்கு 30% தண்ணீரும், தசைகளுக்கு 75% தண்ணீரும், சருமத்திற்கு 64% தண்ணீரும் தேவைப்படுகிறது. இதன் மூலமாக தண்ணீர் நம் உடலுக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

தண்ணீர் நமக்கு போதுமான அளவு நீர்ச்சத்து அளிக்கிறது என்றாலும் தண்ணீரை குடிக்கும் பொழுது நாம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத ஒரு சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. தினமும் ஒரு நபர் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. அதனை எவ்வாறு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது என்னென்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தாகம் எடுக்கும் பொழுது அதனை அடக்கி வைக்க கூடாது. உடனடியாக தண்ணீர் குடித்து விட வேண்டும். அதேபோல தாகம் எடுக்காமலும் அவசியம் இன்றி அதிகப்படியான தண்ணீரை குடிக்க கூடாது. ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கு ஏற்ப தண்ணீரை அதிகப்படியாக குடிப்பதால் ஹைப்போநட்ரீமியா (hyponatraemia) என்ற பிரச்சனை ஏற்படலாம். இதனால் உடலில் இருக்கக்கூடிய உப்பு அளவுகள் குறைந்து மூளை வீக்கம் ஏற்படலாம்.

தண்ணீரில் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை கலந்து பருகுவது சுவையை அதிகரிக்கிறது என்றாலும், தண்ணீரை அப்படியே பருகுவது இன்னும் சிறந்தது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி அல்லது உடல் சார்ந்த வேலைகளை செய்யும் பொழுது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். இது போன்ற சமயத்தில் கட்டாயமாக தண்ணீர் பருக வேண்டும். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், நீங்கள் இழந்த நீர்ச்சத்தை நிரப்பவும் உதவுகிறது.

தண்ணீரை எப்பொழுதும் அமர்ந்த நிலையில் தான் குடிக்க வேண்டும். தண்ணீரை நின்று கொண்டு குடிப்பதால் முடக்கு வாதம் ஏற்படலாம். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பொழுது நமது உடலின் திரவ சமநிலை பாதிக்கப்படுகிறது. ஆகையால் அந்த அதிகப்படியான திரவங்கள் மூட்டுகளில் தேங்கி, இதனால் முடக்குவாதம் ஏற்படும் அபாயம் உண்டாகலாம்.

நின்றவாறு தண்ணீர் குடிப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாக்கலாம். தண்ணீர் குடித்த பிறகும் தாகமாக இருப்பதாக நீங்கள் ஒரு சில நேரங்களில் உணர்ந்து இருப்பீர்கள். இதற்கு காரணம் நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது தான். ஆகையால் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். தண்ணீரை ஒரேடியாக குடிக்காமல் கொஞ்சம், கொஞ்சமாக டம்பளரை வாயில் படுமாறு வைத்து பருக வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 5487

1

0