கோவையில் குறையுமா கொரோனா பாதிப்பு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு தொற்று உறுதி..!!

Author: Aarthi Sivakumar
19 January 2022, 6:00 pm
Quick Share

கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் மூன்றாவது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தகுதியுடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கோவையில் 2,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்துள்ள சுகாதாரத்துறையினர், முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள காவல் நிலையங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் நிலையம் முன்பு கூடாரம் அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றி புகார்களை பெற்று போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவை மாநகர குற்றப் பிரிவில் பணியாற்றும் 5 போலீசாருக்கும், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் 2 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ரத்தினபுரி, வெரைட்டி ஹால்ரோடு ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் தலா ஒரு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 213

0

0