அண்ணா பல்கலை.,யின் பெயர் மாற்றம் வேண்டாம் : ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்..!
23 September 2020, 12:58 pmசென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அப்பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்னும் இருபெயர்களில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலை.,யின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலை.,யின் பெயரை மாற்றினால், உலகளவில் இருக்கும் அதற்கான தரம் போய் விடும். மேலும், பல்கலை.,யை இரண்டாக பிரிக்கும் போது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உரிய நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மாணவர்களின் தேர்ச்சி, முன்னணி நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகும். எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டாம், எனக் குறிப்பிட்டுள்ளனர்.