பள்ளியில் சாதிய மோதல்? வீடு புகுந்து அண்ணன், தங்கைக்கு அரிவாள வெட்டு.. அதிர்ச்சியில் தாத்தா மரணம் : மாணவர்கள் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 1:50 pm
Nellai Caster - Updatenews360
Quick Share

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (வயது14) ஒன்பதாம் வகுப்பும், வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் புதன் கிழமை பெற்றோரிடம் தொடர்பு கொண்டு சின்னத்துரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னத் துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாகவும் அவர்கள் குறித்த விபரத்தை கூறியுள்ளார். இதனை அடுத்து சின்னத்துரையிடம் அந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பின்பு மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சின்னத்துரையை மூன்று பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அங்கு இருந்த சந்திராசெல்வி அதனை தடுத்துள்ளார். அதில் அவருக்கு கையில் அரிவாள் விட்டு விழுந்தது. அதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னத் துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த சிலர் இரு சக்கர வாகனத்தின் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .

இச்சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து காயம் பட்ட சின்னத்துரையும், சந்திரா செல்வியும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வள்ளியூர் பள்ளியில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரியில் வீடு புகுந்து அண்ணன், தங்கை வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பேரன் சின்னத்துரை வெட்டபட்ட அதிர்ச்சியில் அவரது தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்களால் அரிவாளால் வெட்டிய வழக்கில் 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 392

0

0