நள்ளிரவில் கொள்ளை முயற்சி தோல்வி.. அதிகாலை ஊழியர்கள் வரும் வரை காத்திருந்த திருடன் ; தனியார் வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 1:29 pm
Quick Share

வத்தலகுண்டுவில் தனியார் நகை கடன் வங்கியில் பட்டப்பகலில், 3 பணியாளர்களை கட்டிப்போட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மெயின் ரோடு, பள்ளிவாசல் எதிரே, மணப்புரம் தனியார் நகை கடன் வங்கி மாடியில் உள்ளது. இந்த நகை கடன் வங்கியில், வத்தலகுண்டு மற்றும் இதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: காலியானது விக்கிரவாண்டி தொகுதி.. ஜூன் மாதமே இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் கூறிய தகவல்!

இந்நிலையில், நேற்று இரவு கொடைரோடு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன், அமர்நாத் (25) என்பவர் மணப்புரம் நகை கடன் வங்கிக்கு வந்து, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு, வங்கி கதவு சட்டரை திறக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால், திறக்க முடியாததால் இன்று காலை 9 மணி வரை காத்திருந்த அமர்நாத், வங்கி அலுவலக பணியாளர்கள் வரும் வரை காத்திருந்தார். அலுவலர்கள் வந்தவுடன் மறைந்து நின்றிருந்த திருடன் அமர்நாத், ஒரு பெண் அலுவலர் உட்பட 3 பேரை இரும்பு ஆயுதங்களை கொண்டு மிரட்டி, கட்டிப்போட்டு உள்ளார்.

பின்னர், அலுவலகத்தை திறக்க கூறியுள்ளார். ஆனால், வங்கி மேலாளர் வந்த பிறகுதான் அலுவலகம் திறக்க முடியும் என, கட்டி போட்டு இருந்த அலுவலர்கள் கூறியதால், காலை 10 மணி வரை காத்திருந்தனர். ஆனால், அதுவரை அலுவலர்கள் வேறு யாரும் வராததால், பூட்டை உடைத்து ஷட்டரை கையால் தூக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, கதவு சட்டர் திறந்தவுடன், அபாய மணி ஒலித்ததால் நகை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடன் அமர்நாத் சாலையில் தப்பி ஓடினார்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவனை விரட்டி பிடித்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பண்ணை வீட்டில் நுழைந்த மர்மநபர்கள்.. மதுரையில் அதிர்ச்சி..!!

விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, கொடைரோடு அமர்நாத் என்பவன், 2019-ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., பட்டப் படிப்பு (பைனான்ஸ்) படித்துள்ளார். கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூரில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் சித்ரா என்பவர் ரூபாய் 20 லட்சம் வரை கடன் பெற்று, வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தாயாரின் கடனை அடைப்பதற்காக, யூடியூப் சேனல் மூலமாக நகைக் கடைகளில் கொள்ளை அடிப்பது எப்படி? என தெரிந்து கொண்டு, அதற்கான ஸ்குரு டிரைவர், இரும்பு ராடு, திருப்புளி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கிக்கொண்டு கொள்ளையடிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருடனை பொதுமக்கள் விரட்டிப்பிடித்ததால், வத்தலகுண்டு மணப்புரம் நகைக்கடன் வங்கியில், சுமார் 5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 127

0

0