ஒற்றைத் தலைமைதான்… அதுவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான்… இபிஎஸ்-க்கு ஆதரவாக ஈரோடு அதிமுக தீர்மானம்!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 4:24 pm
Quick Share

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கவுந்தப்பாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல் .ஏ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு தேர்தலில் தேர்வு பெற்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், நடைபெறும் பொதுக்குழுவில் கழகத்தை நிர்வகிக்க ஒற்றைத் தலைமை தேவை என்ற கழக அடிப்படை உறுப்பினர்களின் ஏகோபித்த எண்ணத்தின்படி செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதாவது, அம்மா அவர்களின் ஆட்சியை திறம்பட நடத்தியும், கழகத்தை கட்டுக்கோப்புடன் இன்று வரை காப்பாற்றியும் வந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவிடியா தி மு க அரசை வன்மையாக கண்டித்தும், விவசாயிகளின் கனவு திட்டமான அவினாசி அத்திக் கடவு திட்டம் ரூ 1600 கோடி மதிப்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை விடியா தி.மு.க அரசு விரைந்து முடிக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறது.

மேற்படி, பணியை விரைவு படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் என். உமா, மாவட்ட கழக அவைத் தலைவர் கே.சி.பொன்னுதுரை, இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, துணை செயலாளர்கள் எம்.எஸ்.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 563

0

0