அரசுப் போக்குவரத்து கழகத்தில் அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை ; அதிர்ச்சியில் உறைந்து போன அரசு துறை அதிகாரிகள்…!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 3:44 pm
Quick Share

காஞ்சிபுரம் ; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) காஞ்சிபுரம் மண்டல தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம், தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகம் என இம்மூன்று போக்குவரத்துக் கழகங்களும் 30.12.2003-ல் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) என்ற பெயரில் விழுப்புரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மண்டலங்கள் இயங்கி வருகின்றன.

வேறு சில புதிய மண்டலங்களும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 31.07.2022-ன்படி 3287 ஆகும். அதேபோல், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். தற்போது இப்போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேசம் மற்றும் அதனை சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் தினசரி பயன்பாட்டிற்காக பேருந்து வசதியினை அளித்து வருகிறது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி கரை என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) காஞ்சிபுரம் மண்டலம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 200க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பணிபுரியும், சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த மணி (வயது 59) என்பவர் இன்று காலை எப்போதும் போல் பணிக்கு வந்திருந்தார்.

அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள அறைக்கு சென்றவர் திடீரென அங்குள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சக பணியாளர்கள் அவர் சென்ற அறையில் எட்டிப் பார்க்கும்போது தூக்கில் தொங்கியவாறு மணி இருந்ததை கண்டு அதிச்சியுற்றனர்.

பின்னர் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மணியின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றார்கள். அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகின்ற நிலையில் அலுவலகத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அலுவலக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

இது தொடர்பாக சகப் பணியாளர்கள் கூறும்போது , ‘மணி அனைவரிடமும் இன் முகத்துடன் பழகுபவர். மணி இறந்ததற்கு அலுவலக பிரச்சனையா அல்லது சொந்த பிரச்சினையா என தெரியவில்லை. காவல்துறையினரின் விசாரணையில் தான் மணியின் இறப்புக்குறித்து விபரம் தெரிய வரும்,’ எனக் கூறினர்.

Views: - 429

0

0