வடசென்னை திமுக – அதிமுக மோதல் விவகாரம்… அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு..!!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 2:11 pm
Quick Share

வடசென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, நடத்தை விதிமீறல் நடந்துள்ளதா..? அல்லது அதிகாரிகளின் கவன குறைவா..? என்பது குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்டத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக உள்ள வைப்பு அறைக்கு அனுப்பிவைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 4,469 பேலட் யூனிட் அந்தந்த தொகுதியின் ஸ்டோர் ரூமில் ஒவ்வொரு தொகுதியிலும் 16 இடங்களில் வைக்கப்பட உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை, 15 லட்சம் மதிப்புள்ள 12 ஐ போன்கள், 2 கோடியே 35 லட்சம், தங்கம் 8,046 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, ஏற்பட்ட பிரச்சனை குறித்த கேள்விக்கு, “வேட்பு மனு தாக்கல் செய்யும் போது டோக்கன் அடிப்படையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் நடந்துள்ளதா..? அரசியல் கட்சிகளின் குழப்பமா..? அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனக் குறைவா…? என்று விசாரணை அறிக்கை கேட்டுள்ளோம். இதுவரை வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 9 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக சென்னையில் 52 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 10க்கு மேற்பட்ட வாக்கு சாவடிகள் இருந்தால் அவையும் பதற்றமான வாக்கு சாவடியாக எடுத்துக் கொள்ளப்படும், எனக் கூறினார்.

Views: - 107

0

0