புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்த மாணவியை எதிர்த்த விவகாரம் : விசாரணை குழு அமைக்க அமைச்சர் பரிந்துரை

Author: kavin kumar
10 February 2022, 2:40 pm
Quick Share

புதுச்சேரி : அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து குழு அமைத்து விசாரணை செய்ய பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரை செய்துள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்து மாணவி பள்ளிக்கு வந்ததாகவும், ஹிஜாபுடன் வகுப்பறையில் அமர்ந்ததால் அதற்கு தடை விதித்ததாக புகார் எழுந்தது. புகாரையடுத்து பல்வேறு மாணவர் கூட்டமைப்பு மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, அவர்கள் பெற்றோரிடம் புகார் அளித்ததாகவும், அது தற்போது வெளியே கசிந்து இதுமாதிரி புகாராக வந்துள்ளதாக தெரிவித்து அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேலும் இதுபோன்று புகார் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்பில் குழு ஒன்று அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவாகாமி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 956

0

0