சார்பட்டா பரம்பரை ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Author: Udhayakumar Raman
16 August 2021, 6:48 pm
Jayakumar - Updatenews360
Quick Share

சென்னை: சார்பட்டா பரம்பரையில் நாங்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எப்போதும் சமுதாய தலைவர்களை மதிக்கும் இயக்கம் அதிமுகதான். சுதந்திரத்திற்காக பல இன்னல்களை அனுபவித்த மாவீரன் அழகு முத்துக்கோன். அவருக்கு அதிமுக சார்பில் எழும்பூரில் கம்பீர சிலை வடிவமைக்கப்பட்டது. அப்போது கண்ணப்பனும் அமைச்சராக இருந்தார். அழகு முத்துக் கோன் வீரத்தை திமுக அரசு மறைக்க முயல்கிறது. நேற்று வெளியிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில் அழகு முத்துக்கோன் பெயர் இடம்பெறாதது யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

திமுக அமைச்சரவையில் உள்ள யாதவர் சமூகத்தை சேர்ந்த ராஜ கண்ணப்பன், பெரியகருப்பன் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், ”அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரமைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் கருத்து. மத்திய அரசு ஏற்றிக் கொடுத்த அகவிலைப்படியை மாநில அரசு ஏற்றித் தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று பேச மாட்டோம். மலைக் கள்ளன் படத்தில் எம்ஜிஆர் பாடிய ‘ எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் திமுகவிற்கு பொருந்தும். ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதியை அதிகரிப்பது இயல்பானதுதான். வேளாண் தனி நிதி அறிக்கை வரவேற்க கூடியதுதான், ஆனால் கூட்டுப்பண்ணை போன்றவற்றை ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம்.

அதிமுக – பாமக தோழமை தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணியை ராமதாஸ் தற்போது வரை ஏற்று கொண்டுள்ளார். தேர்தலில் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு , அடுத்தவர் மீது பழிபோட்டு விட்டு ‘The great escape’ என்று செல்லும் விதமாக திமுக தற்போது நடந்து கொண்டுள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்தது தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்தோம். தப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சார்பட்டா பரம்பரையில் குறிப்பிட்ட சில காட்சிகளில் உண்மைக்கு மாறான செய்திகள் உள்நோக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.

சார்பட்டா பரம்பரை திமுகவின் பிரசார படம். ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம். மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த உண்மை கதை எல்லோருக்கும் தெரியும். எம்ஜிஆரை அவமதிக்கும் விசயத்தை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது. வளர்ந்து வரும் இயக்குநர்களை மதிக்கிறோம். ஊக்கப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் கண்டனம் தெரிவித்த பிறகும் குறிப்பிட்ட காட்சிகளை அவர்கள் நீக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 86

0

0