9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!!!

27 February 2021, 11:28 am
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு, 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020 -21ம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மே 3ம் தேதி தேர்வு தொடங்கவிருக்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :-கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0