தமிழகத்தில் இனி பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆட்சிதான் : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!
20 August 2020, 6:51 pmதூத்துக்குடி : தமிழகத்தில் இனி பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆட்சிதான் என்றும், மதுரையை 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகரமாக ஆக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை,தமிழகத்திற்கு சென்னை தலைநகரமாக இருந்தாலும் தமிழுக்கு தலைநகரம் மதுரை தான்,தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இல்லாத பெருமை மதுரை நகருக்கு மட்டுமே சொந்தம். மதுரை தமிழ் அன்னையின் பூமி, சங்கம் வளர்த்த தமிழ் கண்ட பூமி, அன்னை மீனாட்சியின் பூமி,மதுரையை 2வது தலைநகரமாக கொண்டுவரவில்லை என்றால் தமிழ், தமிழர் பழமையை ஏற்க மறுக்கிறோம் என்பது பொருளாகும் தமிழின் தலைநகரம் மதுரை தான் வேறு எந்த நகரத்திற்கும் அந்த பெருமை சேராது. மற்ற எல்லா நகரங்களையும் மதிக்கிறோம் அது வேற விஷயம்.
தமிழ் வளர்த்த மதுரை கவனிக்கப்படாத காரணத்தினால் மதுரை மற்றும் அதனைசுற்றியுள்ள மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை, வேலை வாய்ப்பு இல்லை, தமிழின் பெயரை சொல்லி இவர்கள்(அதிமுக, திமுக) 60 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்துள்ளனர். மதுரைக்கு என்ன பெருமை கிடைத்து, தமிழக்கு என்ன பெருமை கிடைத்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மதுரையில் மிகப்பிரமாண்டமான தமிழ் அன்னை சிலை வைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, பா.ஜ.க அங்கம் வகிக்கும் அரசு தான் நிச்சயமாக அமையும், இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் இந்த கட்சி, அந்த கட்சி என்று சொல்லவில்லை பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆட்சி நடக்கும் என்றார்.